ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்கள். அப்போது பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள அரிசி கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு ஏழு தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டி காட்டியதற்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால் நான் இறந்திருப்பேன் என்று அவர் கூறியது நெஞ்சை பதற வைக்கிறது. தங்களுடைய துறையின் ஊழல்களை சொன்னதற்கே அவரை கொலை செய்ய துணிந்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமான செயல். இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்