கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த ஓட்டலில் வேலை செய்யும் பெண்கள் பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஓட்டலில் சுமார் 3 மாதங்களுக்கு முன் ஒரு இளம் பெண் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இளம் பெண்ணுடன் தங்கியிருந்த சக பெண் ஊழியர்கள் விடுப்பில் ஊருக்குச் சென்றுள்ளனர்.
ஓட்டல்அந்த இளம் பெண் மட்டும் முதல் மாடியில் உள்ள அறையில் தனியாக இருந்துள்ளார். இரவு சுமார் 11 மணி அளவில் இளம் பெண் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ், ஓட்டல் ஊழியர்கள் ரியாஸ், சுரேஷ் ஆகியோர் இளம் பெண்ணின் அறை கதவை தட்டியுள்ளனர். இளம் பெண் கதவை திறந்தபோது மூவரும் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இளம்பெண் என்னவென்று கேட்பதற்குள் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து வெளியே குதித்துள்ளார். அதில் அவரது முதுகெலும்பு, இடுப்பு எலும்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இளம்பெண் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் முக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ் உள்ளிட்ட மூவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கம் காவல் நிலையம்இதுகுறித்து இளம் பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், "இளம் பெண் வேலைக்குச் சேர்ந்த உடன் அவர்மேல் அக்கறை உள்ளவர் போன்று ஓட்டல் உரிமையாளர் நடித்து நட்பாகி உள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது நடவடிக்கை தவறான எண்ணத்துடன் உள்ளதை இளம் பெண் உணர்ந்துகொண்டார். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளார். மேலும், இளம்பெண்ணுக்கு ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களையும் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார். இளம் பெண் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு வரை உள்ள வீடியோக்களும் பெற்றோரிடம் உள்ளன" என்றனர். இதற்கிடையே இளம் பெண் பாலியல் பாதிப்பால் மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு கேரள பெண்கள் ஆணையம் கோழிக்கோடு ரூரல் எஸ்.பி-யிடம் விளக்கம் கேட்டுள்ளது.