Vishal: ``வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு `மதகஜராஜா' முன்மாதிரி!'' - நெகிழும் விஷால்
Vikatan February 06, 2025 02:48 AM
படமெடுக்கப்பட்டு 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு திரையரங்குகளில் வெளியானது விஷாலின் `மதகஜராஜா'.

பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியும் திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கிறது. தமிழில் கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த வாரம் `மதகஜராஜா' திரைப்படத்தை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது `மதகஜராஜா' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி பொங்க ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் விஷால்.

அந்த அறிக்கையில், ``2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் "மதகஜராஜா" திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது. மதகஜராஜா திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து படக் குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது.

Vishal

அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம். 12ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மக்களிடம் பிரசித்தி பெறுவதை போன்று அதே எதிர்பார்ப்புடன் 12ஆண்டுகள் கடந்து வெளியான `மதகஜராஜா' திரைப்படமும் மக்களின் பேராதரவு பெற்று பல கோடி வசூலையும் கடந்து மக்கள் குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாடிய 2025 ஆண்டின் முதல் வெற்றி பெற்ற இப்படம், மாபெரும் வசூல் படைத்த திரைப்படமாக திரையுலகில் கால் பதித்தது.

சினிமா வரலாற்றில் ஒரு நல்ல திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அத்திரைப்படம் வெளியிட முடியாமல் பல ஆண்டுகள் கடந்து எப்போது திரையில் வந்தாலும் மக்களின் பேராதரவு உண்டு என்பதற்கு `மதகஜராஜா' திரைப்படம் ஒரு சான்று. அதே போன்று இன்னும் வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு இத்திரைப்படம் முன்மாதிரியாகவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும் வகையிலும் இருந்து வருகிறது. என்னை ஒரு பாடகராக ஏற்று #MyDearLoveru பாடலுக்கு பேராதரவு வழங்கியமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு இந்நாள் மிகவும் முக்கியமான மறக்க முடியாத நாளாக இருக்கிறது. பல தடைகளை தாண்டி நான்கு வலிமையான தூண்கள் உதவியுடன் `மதகஜராஜா' திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்று பல கோடி வசூல் சாதனை படைத்தது போல், பல தடைகளை தாண்டி தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பாதையில் பயணிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். `மதகஜராஜா' திரைப்படம் போன்று உங்களை மகிழ்விக்கும் நல்ல திரைப்படங்களை வழங்கிடுவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் விஷால்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.