``ஐஸ்வர்யா ராய் அழகு..'' -அழகாய் இருக்க ஆலோசனை கேட்ட பெண்... அமிதாப்பச்சன் சொன்ன `நச்' பதில்!
Vikatan February 06, 2025 02:48 AM

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக கணவன் மனைவி இடையே உறவு சரியில்லை என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து அமிதாப்பச்சனோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்த வித கருத்தும் தெரிவிப்பது கிடையாது.

அமிதாப்பச்சன் கோன் பனேகாகுரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அவர் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 25-வது ஆண்டை குறிக்கும் வகையில் அவர் ஜூனியர் பிரிவு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பிரனுஷா தாம்பே என்ற இளம்பெண் அதில் கலந்து கொண்டார். அவர் அமிதாப்பச்சனிடம், ஐஸ்வர்யா ராயின் அழகு குறித்து பேசினார். அமிதாப்பச்சனிடம், சார் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். உடனே அமிதாப்பச்சன் ஆம் அவர் அழகு என்பது எனக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

அதற்கு அப்பெண், ஐஸ்வர்யா ராய் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் மிகவும் அழகு. சார் நீங்கள் அவருடன் தானே வசிக்கிறீர்கள். எனக்கு அழகாக இருக்க சில ஆலோசனைகள் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமிதாப்பச்சன், ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் முகத்தில் இருக்கும் அழகு சில ஆண்டுகளில் மறைந்து போகும். ஆனால் இருதயத்தில் இருக்கும் அழகுதான் மிகவும் முக்கியம்'' என்று தெரிவித்தார்.

அமிதாப்பச்சன்

ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்து ஒருபோதும் வெளியில் பகிர்ந்து கொண்டது கிடையாது. அதிகமான நேரங்களில் ஐஸ்வர்யா ராய் தனது மகளை அழைத்துக்கொண்டு கணவர் இல்லாமல் வெளிநாடு செல்வதுண்டு. இது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அதனை ஐஸ்வர்யா ராய் கண்டுகொண்டது கிடையாது. கடைசியாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கூட ஐஸ்வர்யா ராய் தனியாகவே வந்து கலந்து கொண்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.