கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.
இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர் மட்டுமே அங்கு இருந்தார். அவரும் இரும்பு கதவை இழுத்து மூடிவிட்டு உள்ளேயே இருந்ததால் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வெளியிலேயே வெடித்து தீப்பொறி கிளம்பின. ஒருவேளை கதவை மூடாமல் விட்டிருந்தால், பெட்ரோல் குண்டுகள் உள்ளே போய் விழுந்திருக்கும். சேதமும், விபரீதமும் அதிகமாகியிருக்கும். நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நடைபெறவில்லை.
ரவுடி தமிழரசன்இந்த துணிகரச் செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் மறுநாள் மாலையே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அதில் ஹரி என்பவன் எஸ்.ஐ-யை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாகவும், தற்காப்புக்காக அவனை சுட்டுப் பிடித்ததாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிக் குண்டு ஹரியின் இடது கால் முட்டியை துளைத்தது.
இதையடுத்து 5-ம் தேதிதியான இன்று காலை, ஹரியின் தந்தையும், சிப்காட் பகுதி ரவுடியுமான தமிழரசனையும் தட்டித் தூக்கியிருக்கிறது காவல் துறை. தமிழரசனும் தப்பிஓட முயன்றபோது தடுக்கி விழுந்ததில் வலது கை, வலது கால் முறிந்துபோனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் பேசுகிற போலீஸார், ``லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்த தமிழரசன் ரவுடியாக உருவெடுத்தான். இவன் மீது சிப்காட் காவல் நிலையத்தில் மட்டும் கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறிப்பது, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது என மொத்தமாக ஐந்து வழக்குகள் இருக்கின்றன. 2019-ல் இவனை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தோம். தமிழரசன் மீது ஹெச்.எஸ் என்கிற குற்றப் பதிவேடு தொடங்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டும் வருகிறான்.
ரவுடி தமிழரசன்ஜாமீனில் வெளியே வந்தவன் வியாபாரிகளையும், பொது மக்களையும் மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருந்தான். சமீபத்தில், சிப்காட் பகுதியில் தனது மகன் ஹரி தலைமையிலான கூட்டாளிகளை அனுப்பி கடை வைத்து பிழைப்பு நடத்தும் இரண்டு வியாபாரிகளிடம் ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டினான் ரவுடி தமிழரசன். அவர்கள் மாமூல் தர மறுத்ததால், ஒரு பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசினர். இந்த வழக்கில்தான் தமிழரசனின் கூட்டாளிகள் இருவரைக் கைது செய்தோம். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி தமிழரசன் தனது மகனை அனுப்பி காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசச் செய்திருக்கிறான். இன்று தமிழரசனையும் கைது செய்துவிட்டோம்’’ என்றனர்.