கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூருக்கு அருகிலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த 8-ம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராமலிருந்திருக்கிறார்.
`மாணவி ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ என்று தெரிந்துகொள்வதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரே மாணவியை தேடி அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரியவந்ததையடுத்து தலைமை ஆசிரியர் அதிர்ந்து போனார். மேலும், `தமது பள்ளியின் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர்தான் மாணவியிடம் அத்துமீறினார்கள்’ என மாணவி கூறியதைக் கேட்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளானார் தலைமை ஆசிரியர்.
பாலியல் தொல்லைஇதையடுத்து, பெற்றோரிடம் அறிவுரைக் கூறி உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரியப்படுத்தினார் தலைமை ஆசிரியர். இதைத்தொடர்ந்து, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் `போக்சோ’ சட்டத்தில்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் மூன்று பேரையும் கைது செய்திருக்கின்றனர். மூன்று ஆசிரியர்களையும் `சஸ்பெண்ட்’ செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவியின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் கொதித்தெழுந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது`இந்த படுபாத செயலில் ஈடுபட்ட 3 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆவேசமாக குரல் எழுப்பினர். `கட்டாயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதே பர்கூருக்கு அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றில், என்.சி.சி பயிற்சி என்கிற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறிய சம்பவமும், தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், அதே பகுதியில் இன்னொரு பாலியல் விவகாரம் வெளிவந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், ``பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவிக்கு கருக்கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.