நேற்று டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கும் நடைப்பெற்ற வாக்குப்பதிவில், நேற்றைய மாலை நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்டள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலை, தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது. மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தனது நேர்மைக்கு மக்கள் மீண்டும் சான்றளித்த பின்பே முதல்வராக வருவேன் என்ற சபதத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல் பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பிரச்சாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலை விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியும், டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியது. 3 கட்சிகளின் தீவிர பிரச்சாரம் கடந்த 3-ம் தேதியுடன் ஓய்ந்தது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வாக்களிக்க மக்கள் ஆர்வம்: இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 57.7 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சட்டப்பேரவை தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததையடுத்து, வழக்கம்போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின. டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களையும், பாஜக 37-43 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது. என்டிடிவி வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 10 முதல் 19 இடங்களையும், பாஜக 51-60 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது.
சிஎன்என் வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 30 இடங்களையும் பாஜக 40 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது. பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக வெற்றி பெறும் என்றே தெரிவித்துள்ளன. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.