புதுச்சேரி லாசப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியில் சபரிவாசன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழில்நுட்ப பட்டதாரியான சபரிவாசன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சில நாட்களாக வேலை இல்லாமல் சபரிவாசன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதனை நம்பி சபரிவாசன் ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து தனது விவரங்களை பூர்த்தி செய்துள்ளார். மேலும் கடன் வாங்கி ஐந்து லட்ச ரூபாய் பணத்தை செயலாக்க கட்டணமாக செலுத்தியுள்ளார்.
அதன் பிறகும் அவருக்கு வேலை விஷயமாக எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த சபரிவாசன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். அவருக்கு கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சபரிவாசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபரி வாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.