தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து தான் வேலை பார்க்கும் பகுதிக்கு சிறுவன் ரயிலில் செல்ல முயன்றார். ஆனால் ரயிலை தவற விட்டதால் சிறுவன் தென்காசியில் இருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து ஏறியுள்ளான். அப்போது சிறுவன் மது குடித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த சிறுவன் நடத்துனர் மாடசாமியை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடத்துனர் சிறுவனை பாவூர்சத்திரம் அருகே இறக்கிவிட்டு சென்றார்.
இதனால் கோபமடைந்த சிறுவன் அந்த பேருந்து திரும்பி வரும் வரை காத்திருந்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தை அடைந்ததும் குடிபோதையில் நடத்தினரின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்த முயன்றான். அப்போது மாடசாமி சிறுவனை தடுக்க முயன்றதால் அவரது இடது காதில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்ததும் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.