இனி ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையிலும் சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துதல் அல்லது ஒரே ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்துதல் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டினால், அதன் பின்னர் அந்த காலகட்டத்திற்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் அமலானால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் நேரடியாக பயன்பெறுவர். அத்துடன் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.340 கட்டணம் செலுத்தினால் மாதம் முழுக்கவும், ரூ.4,080 கட்டணம் செலுத்தினால் ஆண்டு முழுக்கவும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என்ற திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு இந்த புதிய திட்டம் மூலம் மாதம் ரூ.1,080 மிச்சமாகும். இத்திட்டம் மூலம் பல லட்சக்கணக்கானோர் பயன் பெறவுள்ளார்கள். புதிய திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், பாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.