விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: காவல் நிலையத்தை சூறையாடிய மக்கள்..!
![](https://shengbo-xjp.oss-ap-southeast-1.aliyuncs.com/Upload/File/2025/02/07/1750128586.jpg)
பீகார் மாநிலத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டி காவல் நிலைய பகுதியில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷிவம் குமார் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல் நிலைய வளாகத்தில் நுழைந்து, காவல் நிலையத்தை சூறையாடினர். அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இதை காவல்துறையினர் தடுக்க முயன்ற போது, மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதிகாலை 3 மணிக்கு ஷிவம் குமார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், காவல் நிலையத்தில் நடந்த மரணம் என்பதால் தலைமை காவலர் உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்த ஷிவம் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran