``வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது... அது நிச்சியம் பழிவாங்கும்" - கண்ணீர்விட்ட ஷேக் ஹசீனா
Vikatan February 07, 2025 05:48 PM

வங்க தேசத்தில் மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்று ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு வங்கதேச மாணவர்களின் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு பதவிநீக்கம் செய்யப்பட்ட அவர், இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், தன் அவாமி லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமாகக் குறிவைக்கப்பட்டது எங்களின் பூர்வீக வீடு. அவர்கள் ஏன் ஒரு வீட்டைப் பார்த்து இவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.

Sheikh Hasina | ஷேக் ஹசீனா

அந்த வீட்டின் நினைவுகளுக்காகவே நாங்கள் வாழ்ந்தோம். ஆனால் அவர்கள் அந்த வீட்டை தீ வைத்து சேதப்படுத்திவிட்டார்கள். இப்போது அவர்கள் அந்த வீட்டை அப்புறப்படுத்தி அழிக்கிறார்கள். நான் இந்த நாட்டிற்கு எதுவும் செய்யவில்லையா? பிறகு ஏன் இவ்வளவு அவமரியாதை செய்கிறார்கள்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று மக்களிடம் கேட்க விரும்புகிறேன். எனக்கு நீதி வேண்டும்... கட்டடத்தைதான் அழிக்க முடியும். வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. வரலாறு பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புல்டோசரைக் கொண்டு மில்லியன் கணக்கான தியாகிகளின் உயிரைப் பலியாகக் கொடுத்து நாம் சம்பாதித்த தேசியக் கொடி, அரசியலமைப்பு மற்றும் சுதந்திரத்தை அழிக்க யாருக்கும் பலம் இல்லை. இத்தனைக்குப் பிறகும் அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருக்கிறான் என்றால் எனக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்க வேண்டும். இல்லையெனில், பலமுறை நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியிலிருந்து நான் எப்படி தப்பித்திருக்க முடியும்? சாதாரண மாணவர்களை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒரு திட்டமிட்ட இயக்கத்திற்கு தற்போதைய பிரதமர் யூனுஸ் பயன்படுத்தியிருக்கிறார்.

Sheikh Hasina

நாட்டிற்கு சேவை செய்யவும், தங்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடங்க வேண்டும். படிக்கும் வயதில், உணர்ச்சிவசப்படுத்தி உங்களைக் கையாளப்படுவது எளிது. எனவே எச்சரிக்கையுடன் படிப்பில் கவனம் செலுத்துங்கள்" எனக் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.

1960-களின் பிற்பகுதியில் பாகிஸ்தானில் இருந்து சுயாட்சி கோரி ஷேக் முஜிப் மேற்கொண்ட இயக்கம் 1969-ல் பெரும் எழுச்சியாக மாறியது. அதிலிருந்து அவர் "பங்கபந்து" அல்லது "வங்காளத்தின் நண்பர்" என்று அன்பாக அழைக்கப்பட்டார். இந்த சுயாட்சி இயக்கத்தை பல ஆண்டுகளாக அவர் வாழ்ந்த இல்லத்திலிருந்து வழிநடத்தியதால், இந்த வீடு வங்காளதேச வரலாற்றில் ஒரு சின்னமாக பார்க்கப்பட்டது. அந்த வீட்டை 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரத்தில் தீ வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த வீட்டை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.