Repo Rate: 'ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு' - உங்களுக்கு என்ன பயன்? - பொருளாதார நிபுணரின் விளக்கம்
Vikatan February 07, 2025 09:48 PM

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு இது முதல் மீட்டிங்.

2024-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இருந்து ரெப்போ வட்டி 6.50 ஆகவே தொடர்ந்து வந்தது. இடையில் ஏகப்பட்ட மீட்டிங்குகள் நடந்தாலும், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா. பதவியேற்றப்பின் அவர் தலைமை தாங்கும் முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் மீட்டிங் இன்று நடந்து வருகிறது.

அதில் முக்கிய முடிவாக, ரெப்போ வட்டி விகிதம் 0.25 பாயிண்டுகள் குறைத்து 6.25 என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பிறகு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இதுவே முதல்முறை.

2020-ம் ஆண்டுக்கு பிறகு...

பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலை, மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு, வேலையின்மை திண்டாட்டம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இந்தியாவில் நிலவி வரும் இந்தக் காலக்கட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் நடுத்தர மக்கள் எப்படி பயனடைவார்கள் என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

"தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது மிகவும் வரவேற்கதக்க விஷயம் ஆகும். இந்த குறைப்பு சிறிய அளவில் இருந்தாலும், இது வீட்டுக்கடன் பெற்றுள்ளவர்களுக்கு நிச்சயம் ஓரளவு உதவியாகத் இருக்கும். வீட்டுக்கடனை ஃப்ளோட்டிங் ரேட்டிங்கில் வாங்கியிருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து இருந்தால், அதை வங்கிகள் உடனடியாக செயல்படுத்தியிருக்கும். ஆனால், இப்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதை வங்கிகள் செயல்படுத்த கொஞ்சம் காலம் எடுக்கும். பெரும்பாலும், இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பு அடுத்த காலாண்டில் செயல்படுத்தப்படலாம்.

இந்த குறைப்பு நடவடிக்கை கடன் வாங்கியிருப்பவர்களுக்கு நன்மையை கொடுத்தாலும், டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு அவ்வளவு நன்மையை தராது. ஃபிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் வட்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும். ஆம்...எப்படி கடன் தவணை தொகை குறைகிறதோ; அப்படி எஃப்.டியின் வட்டியும் குறையும்.

பொருளாதார நிபுணர் நாகப்பன்

வீட்டுக்கடனை எடுத்துக்கொண்டால், வட்டி விகிதம் தான் குறையும் என்பதில்லை. ஒன்று வட்டி விகிதம் குறையலாம் அல்லது கடனின் கால அளவு குறையலாம்" என்று விளக்கினார்.

கடந்த சனிக்கிழமை தாக்கலான பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.