Investment: 1993-ல் ரூ.10,000-க்கு செய்த முதலீடு; இப்போது லட்சங்களில் மதிப்பு! -எப்படித் தெரியுமா?
Vikatan February 14, 2025 01:48 AM
1993-ம் ஆண்டு ரூ.1,000-க்கு வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் இப்போது எத்தனை லட்சங்களாக உயர்ந்திருக்கும் என்று சும்மா கணக்குப்போட்டு பாருங்களேன்.

சென்னையை சேர்ந்தவர் ரவிக்குமார். 1993-ம் ஆண்டு உறவினர் ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுமாறு ரவிக்குமாரிடம் கூறியிருக்கிறார். உறவினர் சொல்கிறாரே என்று இவரும், மேக்னம் மல்டிபிளையர் பிளஸ் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மியூச்சுவல் ஃபண்டில் ரூ.10,000 முதலீடு செய்து ஒரு யூனிட் ரூ.10 என்று 1000 யூனிட்டுகளை வாங்கியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த யூனிட்டுகளை விற்கலாம் என்று சான்றிதழை தேடியபோது, அது கிடைக்கவில்லை. அதனால், ரவிக்குமார் அப்படியே விட்டுவிட்டார்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து கிட்டதட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் வீடு மாற்றுகையில் அந்த சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அப்போது மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் ஒருவரின் உதவியோடு இந்த யூனிட்டுகளை விற்றுள்ளார்.

100 யூனிட்டுகளின் சான்றிதழ்...

இப்போது, மேலே சொன்ன விஷயத்திற்கு வருவோம்... எத்தனை ரூபாயாக ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஐம்பதாயிரம், ஒரு லட்சம், இரண்டு லட்சம்...?! ம்ம்ஹூம்... கடந்த பிப்ரவரி 12-ம் தேதிப்படி, அந்த யூனிட்டுகளின் மதிப்பு ரூ.6,05,240. 'அம்மாடியோவ்' என்று தோன்றுகிறதா. இந்தத் தொகை அவர் முதலீடு செய்த தொகையை விட, கிட்டதட்ட 60 மடங்கு அதிகமாகும்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், அவர் யூனிட்டுகள் வாங்கிய நிறுவனத்தின் பெயர் இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா லார்ஜ் அன்ட் மிட் கேப் ஃபண்ட் என்று மாறிவிட்டது.

இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்... நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது அதிக லாபம் பார்க்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.