சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி மையத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழக உயரதிகாரிகள், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். 2வது நாளாக நாளை நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்க 73 சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச தலைவர் நடராஜன், “எங்கள் சங்கத்தினர் இதுவரை எவ்வளவு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பேசவில்லை. பொதுத்துறையான மின்சாரத்துறை போன்றவற்றின் ஊதியத்தை கணக்கு வைத்து எங்கள் ஊதிய உயர்வையும் தீர்மானிக்க கூறினோம். தொழிற்சங்கத்தினரை பிரித்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக அண்ணா தொழிற்சங்க பின்னர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 2005 ல் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு சங்கத்தையும் தனித்தனியாக அறையினுள் அழைத்து பேசினர். பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்பதே நோக்கம். எந்த சங்கத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் அனைத்து சங்கத்தினர் கூடுதல் நேரம் பேச முடிகிறது.
போக்குவரத்துத் துறையில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். மினி பேருந்து சேவைக்கு ஏற்கனவே இருந்த நடைமுறைகளே பின்பற்றப்படும் என்பதால் தனியார் மயம் குறித்து அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் கூறியுள்ளார். தனியார் மூலம் சென்னையில் பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக கேட்கின்றீர்கள். டெண்டர் விடப்பட்டால் நீதிமன்றங்கள் மூலம் அந்த டெண்டர்களை ரத்து செய்ய முடியும். தனியார்மயம் குறித்த அமைச்ச்சரின் கருத்து மீறப்பட்டால் நாங்கள் மீண்டும் அதுகுறித்து அமைச்சரிடம் வலியுறுத்துவோம்” என்றார்.