திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கவிதா வயது 40. இவர் தன்னுடைய பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மீண்டும் வீடு திரும்பிய போது சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிதா மீது மோதி அருகே உள்ள வீட்டில் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவிதா மற்றும் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் என்பவரின் மகன் மோகன்தாஸ்( 28) என்பதும், இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் நாட்றம்பள்ளி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.