மணிப்பூரில் கடந்த 2023-ல், மெய்தி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில், 2023 மே மாதம் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த வன்முறைத் தீ அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு வன்முறையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவராமல் இருக்கிறது.
இதுநாள் வரையிலும் மணிப்பூருக்கு நேரில் செல்லாத பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளின் நெருக்கடியால் ஒரேயொருமுறை மட்டும் மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அதேபோல், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவராமல் வேடிக்கை பார்க்கும் மாநில முதல்வர் பிரேன் சிங் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதெல்லாம் அவர் மவுனம் காத்துவந்தார்.
இவ்வாறிருக்க, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 174(1)-ன்படி, கடைசியாக சட்டமன்ற அமர்வு கூடி ஆறு மாதங்களுக்குள் அடுத்த அமர்வு கூட்ட வேண்டும் (மணிப்பூரில் கடைசியாக 2024 ஆகஸ்ட் 12-ல் சட்டமன்றம் கூடியிருந்தது) என்ற நிலையில், கடந்த ஞாயிறு அன்று திடீரென முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலகினார். பிரேன் சிங்கின் இந்த முடிவு பா.ஜ.க-வைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டது என்றும், மணிப்பூர் மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்றும் காங்கிரஸ் விமர்சித்தது.
பிரேன் ராஜினாமா செய்த அடுத்த நாளே, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் பல்லா ரத்து செய்தார். மாநிலத்தில் கடைசியாக சட்டமன்றம் கூடி நேற்றோடு ஆறு மாதங்களும் முடிவடைந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!