உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நிகழ்வு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் மகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு பிரதேச அரசு தெரிவித்தது. அத்துடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாகவும்,புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்,உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு புனித நீராடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.