மதுரை எய்ம்ஸ் முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளதாக மதுரை எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குநர் ஹனுமந்த ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமானத் திட்டம் 2 கட்டங்களாக நிறைவடையும். முதற்கட்டப் பணிகள் தொடக்க தேதியில் இருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவை, மாணவர்கள் தங்கும் விடுதி, அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் உள்ளன. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது. 2ஆவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027 க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, ஒட்டுமொத்தமாக கட்டுமானத்தில் 14.5% முன்னேற்றம் அடைந்துள்ளது. ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதன் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சி நடக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.