`அமலாக்கத்துறை என்னையும் விசாரிச்சது' - ஆரூர் தமிழ்நாடன்; ED நடவடிக்கைக்கு ஷங்கர் பதில்
Vikatan February 21, 2025 11:48 PM

இயக்குநர் ஷங்கருக்குச் சொந்தமான சுமார் ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையாச் சொத்துகளை முடக்கி உத்தரவிட்டிருக்கிறது அமலாக்கத்துறை.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கிற  அறிக்கையில், எழுத்தாளர் தமிழ்நாடன் 'எந்திரன்' படக் கதை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை அடிப்படையாக வைத்து சில தரவுகளைச் சேகரித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'எந்திரன்' படக் கதையின் காப்புரிமை தொடர்பாக ஏற்கெனவே நடந்த சில விஷயங்களை கொஞ்சம் ரீவைன்ட் பார்க்கலாம்...

ஷங்கரின் `எந்திரன்’

1996 ஏப்ரல் மாதம் ‘இனிய உதயம்’ இதழில் வெளியாகிறது ‘ஜூகிபா’ சிறுகதை. கதையை எழுதியவர் பத்திரிகையாளரான ஆரூர் தமிழ்நாடன். 2007-ல் நக்கீரன் பதிப்பகத்தில் தமிழ்நாடனின் புத்தகம் வெளிவந்த போது அதில் ஒரு கதையாகவும் இடம் பெறுகிறது `ஜூகிபா'. 

ஜூகிபா ஓர் அதி அற்புத கம்ப்யூட்டர். உருளும் நியான் விழிகளால் பார்க்கும் காட்சிகளைத் தனக்குள் பதிவு செய்து கொள்ளும். கேள்விகளுக்கு மெட்டாலிக் வாய்ஸில் பதில் சொல்லும். எந்திர மூட்டசைத்து அதிராமல் நடக்கும். உலோகக் கைகளைக் கண்டபடி கண்ட திசைகளிலும் சுழற்றி, கொடுத்த வேலையைக் கச்சிதமாய்ச் செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக சூழலைப் புரிந்து கொள்ளும் உணர்வுத்திறனும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இயங்கும் சுய செயல்திறனும் அதனுள் புகட்டப்பட்டிருக்கும்.

இப்படியாகப் போகும் கதையில் கடைசியில் ஜூகிபா தன்னை உருவாக்கிய விஞ்ஞானியின் காதலியிடமே காதல் வயப்படும். அந்தக் காதலி கிடைக்க மாட்டாள் எனத் தெரிந்ததும் தற்கொலை செய்து கொள்ளும். இதுதான் கதை!

எந்திரன்

இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜின், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியான 'எந்திரன்' படத்துக்கு வருவோம்.

2010-ல் எந்திரன் படம் வெளியாகிறது. படத்தைப் பார்த்த ஆரூர் தமிழ்நாடன் ஷங்கருக்கும் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறனுக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்புகிறார். அவர்களின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வராததால் வழக்கு தொடுக்கிறார்.

"வழக்கு விசாரணைக்கு உகந்ததே" என்ற நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளரை மட்டும் விடுவித்து தீர்ப்பு வழங்குகிறது. இன்னொருபுறம் ஷங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோருகிறார்கள். உச்ச நீதிமன்றமோ வழக்கைத் தள்ளூபடி செய்ய மறுத்ததுடன் கீழ் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளச் சொல்கிறது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு இந்த நாள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில்தான் தற்போது இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை ஷங்கரின் சொத்துகளை முடக்கியிருக்கிறது.

இந்நிலையில் ஆரூர் தமிழ்நாடனிடமே பேசினோம்.

''அமலாக்கத்துறை அதிகாரிகள் கொஞ்ச நாள் முன்பு என்னையும் விசாரணைக்கு அழைத்தார்கள். வழக்கு குறித்துக் கேட்டு, படக்கதை என்னுடையது என நான் குறிப்பிடுவதற்கான ஆதாரங்களைக் கேட்டார்கள். நான் என்னிடமிருக்கும் அத்தனை ஆதாரங்களையும் அவர்கள் முன் சமர்ப்பித்தேன். பிறகு அனுப்பி விட்டார்கள். தொடர்ந்து இயக்குநர் ஷங்கரையும்  விசாரித்ததாகக் கேள்விப்பட்டேன்.

ஆரூர் தமிழ்நாடன்

இந்தச் சூழல்ல இப்ப ஷங்கருடைய சொத்துகள் முடக்கப்பட்டதா அமலாக்கத்துறை அறிக்கை வந்திருக்கு. என்னைப் பொறுத்தவரை இந்த நடவடிக்கை என்னுடைய தரப்புக்கு வலு சேர்க்கும்னு நம்பறேன்.

வழக்கின் தொடக்கத்துல, உங்க கதையை நாங்க எடுக்கலைனு சொல்லி என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்யக் கேட்டாங்க. கோர்ட் ரெண்டு கதைக்குமிடையே இருக்கிற நிறைய ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்திடுச்சு. பிறகு கோர்ட்டுக்கு வெளியே, செட்டில் செய்து முடிச்சிக்கலாம்னு கூட வந்தாங்க. ஆனா நான் சட்டப்படியான தீர்வையே விரும்பறதால வழக்கு இன்னைக்கு வரை போயிட்டிருக்கு. நிச்சயம் இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும்னு நான் நம்பிக்கையா இருக்கேன்'' என்கிறார் இவர்.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் இருந்து இது தொடர்பாக விளக்கம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ஷங்கர், ``அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில் எடுத்த நடவடிக்கையை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எந்திரன் (ரோபோ) திரைப்படம் தொடர்பான ஆதாரமற்ற திருட்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், என்னுடைய மூன்று அசையா சொத்துக்களை அவர்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளனர். இன்றுவரை, அமலாக்க இயக்குநரகத்திடமிருந்து பறிமுதல் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, ஆனால் பறிமுதல் ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்த நடவடிக்கை சட்ட உண்மைகளை தவறாகப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், சட்ட செயல்முறையின் தெளிவான தவறான பயன்பாட்டையும் குறிக்கிறது.

இயக்குநர் ஷங்கர்

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விஷயம் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் சிவில் வழக்கு எண். 914/2010 இல் முழுமையாக தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை முன்னிலைப்படுத்துவது மிகவும் முக்கியம். இரு தரப்பினரின் ஆதாரங்களையும் வாதங்களையும் நீதிமன்றம் கவனமாக ஆராய்ந்து, எந்திரன் கதையின் உரிமையாளரென ஆரூர் தமிழ் நாடன் தாக்கல் செய்த கோரிக்கையை நிராகரித்தது.

இந்தத் தெளிவான நீதித்துறைத் தீர்மானம் இருந்தபோதிலும், அமலாக்க இயக்குநரகம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) சுயாதீன அறிக்கையை நம்பி, உயர் நீதிமன்றத்தின் C.S.No.914/2010 தீர்ப்பை புறக்கணித்து, எனது சொத்துக்கள் மீதான நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று சிவில் நீதிமன்றத்தின் தெளிவான சட்டத் தீர்ப்பு இருந்தபோதிலும், ED-யின் தொடர்ச்சியான நடவடிக்கையால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த அத்துமீறல் சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தைக் குறிக்கிறது.

அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து, இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கைகளை நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், பறிமுதல் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.