ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் காட்டன் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. விசைத்தறித் தொழிலை நம்பி இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். 2021 - 2024 ஆண்டுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில், புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் 5 சதவீத கூலி உயர்வு பெற்றுத் தர வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் ஶ்ரீ பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாத நிலையில் விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். அதன்படி, கூலி உயர்வு வழங்கக் கோரியும், கூலி உயர்வு வழங்காத விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்காத தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் விசைத்தறித் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தினசரி ரூ.10 லட்சம் வரை காட்டன் சேலை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விசைத்தறித் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!