தமிழ்நாட்டில் ஓசூர், ஸ்ரீபெரும்பதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலைகள் அதிகமாக உள்ளன. இதுதவிர புதிய ஆலைகளை ஈரக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா என்ற சொகுசு கார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். அந்த கார்களுக்கு என்று தனி மவுசு உண்டு. இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது விற்பனையை விரைவில் தொடங்க உள்ள நிலையில், உற்பத்தி ஆலையையும் அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டிற்கு டெஸ்லா நிறுவனம் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் கூறி உள்ளார்.
இதுதொடா்பாக டி.ஆர்.பி. ராஜா பேசுகையில்," தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனம் மட்டுமில்லை எல்லா நிறுவனங்களும் முதல் அமைச்சர் தொழில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
கிருஷ்ணகிரியில் பாதுகாப்பு துறை சார்பில் ஆலைகள் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. பெங்களூருவுக்கு நிகராக ஓசூர் நகரத்தை வளர்ச்சி அடைய செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது" என்று டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், எலான் மஸ்கை சந்தித்து தொழில் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை நடத்தி இருந்தார். அதன் எதிரொலியாக தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. அது தமிழ்நாட்டில் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.