இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சீவா குமரா சமரரத்னே. இவர் கொலைகார கும்பலின் தலைவனாக அறியப்படுகிறார். இவர் 2023 செப்டம்பர் மாதம் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பிப்ரவரி 19ம் தேதி அவரது பிணைக் குறித்த விசாரணைக்காக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அந்நாட்டின் சிறப்பு அதிரடிப் படையின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்காக அவர் நீதிமன்ற கூண்டில் ஏறியபோது வழக்கறிஞர் வேடமிட்டு அங்கு வந்த நபர் ஒருவர் சஞ்சீவாவிவை துப்பாக்கியால் சுட்டார்.
போலீசார் பாய்ந்து பிடிப்பதற்குள் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய கொலையாளியை தேடி வந்த போலீஸார் அவர் அந்நாட்டை விட்டு கடல் வழியாக தப்பிக்க முயன்றபோது கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் இந்த கொலைக்காக ஒரு புத்தகத்தினுள் துப்பாக்கி வடிவில் பக்கங்களை வெட்டி அதனுள் அவர் பயன்படுத்திய ரிவால்வர் ரக துப்பாக்கியை பதுக்கி பின்புரா தேவாங்கே இஷாரா செவ்வாண்டி (வயது 25) என்ற பெண்ணின் உதவியுடன் நீதிமன்றத்தினுள் அதனை எடுத்து வந்ததாக தெரிகிறது. தலைமறைவான அந்த பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டுள்ள போலீஸார் அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு அவர்களுக்கு உதவியதாக ஒரு காவலர் மற்றும் ஒரு வேன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 தொடக்கத்திலிருந்து இதுவரை தொடர் கொலைகளினால் 9 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கும்பல்களின் நடவடிக்கைகளை விரைந்து அடக்குவோம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தினுள் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியிருப்பது இலங்கை மக்களிடையே பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.