கொரோனா காலத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அந்த வகையில் தெலங்கானாவில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ம் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டம், ராமரெட்டி மண்டலத்தில் உள்ள சிங்கராயப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் 16 வயது ஸ்ரீநிதி. இவர் காமரெட்டியில் தங்கியிருந்தபடி தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று பள்ளிக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.சக மாணவிகள் கூறியதும் ஆசிரியர்கள் ஓடிச்சென்று முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீநிதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே மாவட்டத்தில் உள்ள அலிகரின் சிரௌலி கிராமத்தில் வசித்து வரும் 6ம் வகுப்பு மாணவன் மோஹித் சவுத்ரி விளையாட்டு போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது பயிற்சி ஓட்டத்தில் போது மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அதே போல் 8 வயது தீக்ஷா என்ற மற்றொரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் எம். ரப்பானி, "ஆரோக்கியமான ஒருவர் ஒரு மணி நேரத்திற்குள் இறந்தால், அது திடீர் மாரடைப்பு எனப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குழந்தை மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி பற்றி புகார் செய்தால், அவரை உடனடியாக பரிசோதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.