தமிழகத்தில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியை இந்திய ஆயில் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக இ கேஒய்சி விவரங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று சரிபார்த்து வருகின்றன. இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வருகின்ற மார்ச் 31 தான் கடைசி நாள் என்றும் காலக்கெடு முடிவடைவதற்குள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விவரங்களை ஏஜென்சிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என்று ஒரு செய்தி பரவி வருகிறது.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் சராசரியாக 2.10 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் உண்மையான வாடிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து போலிகளை களைய வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் கார்டு மற்றும் பயோமெட்ரி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி செய்யும்போது அவர்களின் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். நேரில் சென்று அல்லது ஏஜென்சி ஊழியர்கள் அவர்களுடைய வீட்டுக்கு சென்று விவரங்களை சேகரிப்பார்கள். இந்த விவரங்களை சமர்ப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.