2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகி, அதிக வசூலையும் குவித்தப் படம் 'எந்திரன்'.
இந்த 'எந்திரன்' திரைப்படத்தின் கதை காப்புரிமை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் தற்போது அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
'எந்திரன்' திரைப்பட கதையின் காப்புரிமை குறித்தான இந்த வழக்கு 2011-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவரால் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. அப்போது இது குறித்து ஆரூர் தமிழ்நாடன், “ 'ஜூகிபா' கதைக்கும் 'எந்திரன்' கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. என் கதையைத் திருடி `எந்திரன்' திரைப்படத்தை எடுத்து, இயக்குநர் சங்கர் மோசடி செய்திருக்கிறார். இது காப்புரிமைச் சட்டப்படி கிரிமினல் குற்றம்" என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
"யாருடையக் கதையையும் நாங்கள் திருடவில்லை. இது எங்களுடையை கதைதான்" என்று ஆரூர் தமிழ்நாடனின் இந்த வழக்கை எதிர்த்து இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார் ஆரூர் தமிழ்நாடன். இதை உறுதி செய்த நீதிபதி, இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கினார். அவ்வகையில் 2011ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு பல ஆண்டுகளாக் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கின் அடிப்படையில் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது ஷங்கரின் சொத்துகள் முடக்கப்பட்ட தகவல்கள் மட்டும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை அமலாக்கத்துறை தீவிர விசாரணைக்குப் பிறகு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.