2026 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும், ஆர். லட்சுமணன் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்
திமுக ஆட்சி அமைத்த 07.05.2021-ம் தேதி அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செஞ்சி தொகுதி எம்எல்ஏவான மஸ்தான், கடந்த ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரதக்கது.
இதேபோல் மதுரை மாவட்ட திமுகவில் மீண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். மாவட்டச் செயலாளர் பொறுப்பு விவகாரத்தில் தொடங்கி, தொடர்ந்து கோ.தளபதியுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மதுரை மத்திய தொகுதிக்கான பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்