உதயநிதியுடன் விவாதம் நடத்த தயார்! விளையாட்டுத் துறைக்கு அதிகம் செய்தது யார்? - ஜெயக்குமார்....
Seithipunal Tamil February 24, 2025 03:48 AM

சென்னை மயிலாப்பூரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்குப் பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது," தி.மு.க ஆட்சியில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் விளையாட்டு துறையை ஊக்கப்படுத்துவதற்கு எதுவுமே செய்யவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் விளையாட்டு துறைக்கு என்ன செய்தோம்!,திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்! என்று விவாதம் வைக்கலாம்.

ஜெயக்குமார்:

அது தொடர்பாகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். தி.மு.கவினர் "மோடி கெட் அவுட்" பா.ஜ.கவினர் "ஸ்டாலின் கெட் அவுட்" என இரு தரப்பினரும் மாறி மாறி 'கெட் அவுட்' போட்டு ட்ரெண்டாக்கி வருகிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தினமும் கொலை நடக்கிறது. மக்கள் வாழ்வதற்கே அச்சப்படும் சூழ்நிலையில் இதைப் பற்றி பேச வேண்டும். ஆனால் இதைப் பற்றிப் பேசுவதில்லை. விலைவாசி உயர்ந்துவிட்டது. அதைப்பற்றிப் பேசுவதில்லை. பாலியல் வன்முறை, போதைக் கலாச்சாரம் எல்லாமே அதிகமாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இரு தரப்பினரும் மாற்றி மாற்றி 'கெட் அவுட்' என்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் மறைமுக உறவுடன் பிரச்சனையைத் திசை திருப்புகிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது.

வீணான வில்லங்கம்:

ஒரு குழந்தைப் பக்கத்து வீட்டுக்குப் போய் அங்குள்ள அம்மாவைப் பார்த்து அம்மா என்று கூப்பிட்டால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். அதுவே ஒரு குழந்தைப் பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் கணவரை அப்பா என்று கூப்பிட்டால் அந்தக் குழந்தையின் தாய் சும்மா விடுவாரா? இது வீணான வில்லங்கம். எனது பிள்ளைக்கு நான் தான் அப்பா எனது பிள்ளைக்கு வேறு யாரும் அப்பா கிடையாது. தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகிறார்கள்.

2026 சட்டசபை:

ஆனால் எதையும் செய்யாமல் சொல்லாததையும் செய்தேன் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டசபைத் தேர்தலில் திருப்பி அடிப்பார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கத்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி லாய்க்கு. அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்க லாயக்கே கிடையாது. அவர் பள்ளிக்கல்வித்துறை பூஜ்ய அளவில் தான் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது என்று சர்வதேச அமைப்பு ஏதாவது ஆய்வு செய்து கூறியிருக்கிறதா? ஒரு அமைச்சரை முதலமைச்சர் பாராட்டுவது எப்படிச் சான்றிதழ் ஆகும்.

ஒருவரை ஒருவர் பாராட்டி:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்கிறார்கள். நாங்கள் இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கிறோம். ஆனால் மூன்றாவது மொழிக் கற்க விரும்புபவர்களின் விருப்பத்தை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் இவர்கள் ஒரு தமிழினத்தையே அழித்தவர்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அளித்தவர்கள். தமிழ் இனத்தை பற்றிப் பேச தகுதியற்றவர்கள் இவர்கள் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை" என அவர் தெரிவித்திருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.