கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - ஞானசேகரினிடமிருந்து சொகுசு கார் பறிமுதல்..!
Seithipunal Tamil February 24, 2025 07:48 AM

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, அண்ணாநகர் துணை ஆளுநர் சிநேக பிரியா தலைமையிலான மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. 

அந்த குழுவினர் நடத்திய விசாரணையில், 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா மாதிரியான வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசாருக்கு ஆலந்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

அதன்பேரில் போலீசார் ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில் அவர், பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதுடன், பிரியாணி கடை வைத்ததாகவும், பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம், அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.