தலைவாழை இலையில் விருந்து படைத்தாலும் தட்டில் சாப்பிட்டாலும் ஒரு கவளத்தை பசியோடு அள்ளி எடுக்கும் போது கையில் உணவோடு நீண்டு வரக்கூடிய முடியைக் கண்டால் உணவு உண்ணும் ஆசையே போய் விடும். உணவின் மீது ஒருவித வெறுப்பு உண்டாகும். உணவில் முடி இருந்தால் உறவு வளரும் என்பதெல்லாம் பழமொழி அல்ல. உண்மையும் அல்ல. ஆரோக்யமான உணவாக இருந்தாலும் அதில் அறியாமல் முடி நுழைந்துவிட்டால் உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும்.
வெளியில் மட்டுமல்ல வீட்டில் பார்த்து பார்த்து சமைத்தாலும் நம்மையும் அறியாமல் காற்றிலோ, உணவுப்பொருள்கள் திறந்திருக்கும் போது அதன் மீது முடிகள் விழுகிறது. நீளமான முடிகள் கைகளிலோ கண்களிலோ அகப்பட்டாலும் அளவில் குறைந்த மிகச்சிறிய முடிகள் நம் வயிற்றுக்குள் சென்று ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது.
முடி ஆனது கெரட்டின் என்னும் புரதத்தைக் கொண்டிருக்கிறது. இது நமக்கு நேரிடையாக ஆபத்தை தராது. ஆனால் நாம் உண்ணும் உணவை மாசுப்படுத்திவிடும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீண்ட நாள்களாக வைத்திருக்கும் போது அதில் முடி இருந்தால் அவை நோய் கிருமிகளை உண்டாக்கும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவிக்கிறது. மேலும் முடிகளில் இளநரை தடுக்க போடப்படும் சாயங்கள், கெமிக்கல் ஷாம்புகள் போன்றவை உணவுகளில் கலக்கும்போது நோய்க்கிருமிகளை விரைவில் உண்டாக்கிவிடுகிறது.
பொதுவாகவே சாப்பிடும் போது வாய்க்குள் முடி சென்றுவிட்டால் உடனே தொண்டைக்குள் போகாமல் அடி நாக்கில் மாட்டிக்கொண்டு ஒவ்வாமையை உண்டாக்கும். சில நேரங்களில் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டும் அவ்வாறு ஒவ்வாமையை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த நேரங்களில் சிலர் வாய்க்குள் கையைவிட்டு தொண்டை வரை சென்று வாந்தி எடுப்பார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது.
முடி வயிற்றுக்குள் சென்றதும் உடலில் உள்ள உறுப்புகள் அதை வெளியேற்றும் பொருட்டு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். அதனால் வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடிய எந்த கைவைத்தியத்தையும் மாத்திரைகளையும் கடைப்பிடிக்க கூடாது. வயிற்றுப்போக்கில் முடி தானாக வெளியேறி விடும்.
அதேநேரம் அளவு கடந்த வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்து இழக்க நேரும் அபாயமும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாட்டிமார்கள் வயிற்றுக்குள் முடி சென்றுவிட்டால் வெறும் சோறை பெரிய உருண்டையாக உருட்டி வாயில் மெல்லாமல் விழுங்க செய்வார்கள். அதே நேரம் நெல்மணியையும் விழுங்கச் சொல்வார்கள்.
ஏனெனில் வயிற்றில் இருக்கும் முடி நெல்மணியைச் சுற்றியபடி மலம் கழிக்கும் போது வெளியேறி விடும். இவ்வளவு முயற்சிகள் செய்து முடியை வெளியேற்றுவதை விட உணவு சமைக்கும் போது சுத்தமாக சுகாதாரமாக சமைப்பதும், சாப்பிடும் போது கவனத்தை வேறுபக்கம் திருப்பாமல் உணவை கவனித்து சாப்பிடுவதும் சாலசிறந்தது.