போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் பிப்ரவரி 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியாலேயே தற்போது அவர் சுவாசித்து வருவதாகவும், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23ம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதால் உடல்நிலை அபாய கட்டத்தை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்தம் உறைதலுக்குத் தேவையான ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததால், ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.