குரலை வைத்து மனிதர்களை அடையாளம் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ தொழில் நுட்பத்தால் மட்டுமே சாத்தியம் எனக் கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் பின்னால் நின்று அழைக்கும் மாணவர்களின் குரலை வைத்து அந்த மாணவர் யார் எனக் கண்டறிந்து பெயரைக் கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். தனது வகுப்பில் உள்ள அத்தனை மாணவ, மாணவிகளின் பெயர்களையும் அந்த ஆசிரியைக் கூறும் வீடியோ கேரள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு திருகரிப்பூர் பகுதியில் உள்ள உதினூர் சென்ட்ரல் ஏ.யு.பி ஸ்கூலில் 5-ம் வகுப்பு ஆசிரியையாக இருப்பவர் பி.வி.நவ்யாஸ்ரீ. இவர் நார்காலியில் அமர்ந்திருக்க பின்னால் நின்றுகொண்டு அவரது வகுப்பு மாணவ, மாணவியர், 'டீச்சரே...' என அழைக்கிறார்கள். மாணவ, மாணவியரைப் பார்க்காமலே அவர்களின் குரலை வைத்து பெயரைக் கூறி அசத்துகிறார் ஆசிரியை நவ்யா ஸ்ரீ. தங்கள் பெயரை ஆசிரியைச் சரியாகக் கூறியதும் மாணவ, மாணவியர் புன்சிரிப்புடன் செல்லும் அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
டீச்சரே என அழைக்கும் மாணவர்கள் மத்தியில் ஆசிரியை நவ்யாஸ்ரீ-யின் மகன் ஸ்ரீதேவும் உண்டு. பள்ளியில் மதிய உணவு இடைவேளை சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை அந்த பள்ளியின் ஆசிரியர் விபின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஆசிரியை நவ்யாஸ்ரீ-யை பலரும் போனில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசிரியை நவ்யாஸ்ரீ கூறுகையில், "நான் உதினூர் சென்ட்ரல் ஏ.யு.பி ஸ்கூலில் 5-ம் வகுப்பு 'டி' செக்ஷன் கிளாஸ் டீச்சராக உள்ளேன். எட்டு வருடமாக இந்த பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். காலிக்கடவு பகுதியில் வசித்து வருகிறேன். சின்ன வயதிலேயே நடனம் பயின்றேன். நடன ஆசிரியராகவும் உள்ளேன். மாணவர்களுக்கு இலவசமாக திருவாதிரை களி நடனம் கற்றுக்கொடுத்து வருகிறேன். மாணவர்களுடன் எப்போதும் அன்பாகப் பழகுவதால் அனைத்து மாணவ, மாணவிகளின் குரலும் எனக்கு அத்துபடியாக மனதில் பதிந்துள்ளது. நான் எனது நடன வீடியோக்களை ரீல்ஸ் ஆக வெளியிடுவேன். ஆனால், இந்த வீடியோ வைரல் ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.