அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓநாய் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கே.ஏ செங்கோட்டையன் ஆடு ஓநாய் குறித்தெல்லாம் அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என கோபமாக கூறிச்சென்றார்.
கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். அப்பொது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் காணும் நன்னாளில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன். நாளை கழகத்தின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவரின் ஆணைப்படி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக சார்பாக தலைமை கழக நிர்வாகிகள் பல பேர் அம்மாவின் பிறந்த நாளை எழுச்சியுடன் அன்னதானம் வழங்குகின்றனர் பிறந்தநாள் என்பதால் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்தந்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத்தினரை உற்சாகப்படுத்துவதற்கும் கழகத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கும் உற்சாகத்துடன் இது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். 2026-ல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு தமிழ்நாட்டில் நல்லாட்சியை அமைப்போம்.
தயவு செய்து மற்ற கேள்விகள் எதுவும் வேண்டாம்... ஆடு, ஓநாய் குறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடமே கேளுங்கள்... அதெல்லாம் அவர் தான் சொல்லியிருக்கிறார்” என்றார்.