புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாந்தன்பட்டி கிராமத்தில் சிவகணேஷ்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் சிலம்பம் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு இவர் கபடி விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் நேற்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றனர்.
அதில் தனது அணி சார்பாக சிவகணேஷ் பங்கேற்றுக் கொண்டார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு அங்கு முதலுதவி வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து சக போட்டியாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.