சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில் பல வருடமாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. பகல் நேரத்திலேயே அங்குக் கூட்டம் அலைமோதும்... அவ்வப்போது குடிமகன்களுக்கிடையே வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் நடக்கும். இந்த டாஸ்மாக் எதிரே அரசு காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் அமைக்கப்பட்டு, ஒரு வருடமாகியும் இன்னமும் திறக்கப்படாமல் இருந்தது. வியாபாரிகள் சாலையிலேயே காய்கறிகளை விற்பனை செய்து வந்தார்கள்.
''ஏன் இப்படி நடக்கிறது? நீங்கள் ஏன் மார்க்கெட் உள்ளே சென்று வியாபாரம் செய்யாமல்... சாலையில் இப்படி வெயிலில் மழையில் கஷ்டப்படுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு வியாபாரிகள், "இந்த மார்க்கெட் வளாக கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. எதிரே டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள், மார்க்கெட் வளாகத்தில் வந்து அமர்ந்து கொண்டு, அங்கேயே வைத்து மது அருந்திவிட்டு, பிரச்னை செய்கிறார்கள். குடித்துவிட்டு பிரச்னை செய்வது, வாந்தி எடுப்பது என ஏக பிரச்னைகள் இங்கு நிலவுகிறது. அதன் காரணமாகச் சாலையில் வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். அதிகாரிகள் தாமதப்படுத்தாமல் மார்க்கெட்டைத் திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஓமலூர் பேரூராட்சி ஆணையரிடம் பேசியிருந்தோம். ``இந்த மார்க்கெட்டை, ஏற்கெனவே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் சுற்றுலாத் துறை அமைச்சரும் திறக்க உள்ளதாக இருந்தது. அந்த நேரத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டதால், அமைச்சர்கள் அங்குச் சென்றுவிட்டதால், இந்த மார்க்கெட்டை திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த இடத்தை பாதுகாக்கும் வகையில், சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்க விரைவில் டெண்டர் விடப் போகிறோம். விரைவில் திறக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட தினசரி சந்தையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் (பிப்.22) அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தனர். விழாவில், சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் இனி சிரமமின்றி தங்கள் வியாபாரத்தைத் தொடரலாம்!