”தமிழக சட்டப்பேரவையில் நாங்கள் செங்கோலை நிறுவுவோம்! நாங்களா, அவங்களா? பாத்துக்கலாம்”- தமிழிசை
Top Tamil News February 25, 2025 09:48 PM

பா.ஜ.க வின் உண்மையான கொள்கையில் இருந்து உண்மையான தொண்டர்கள் யாரும் விலக மாட்டார்கள் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்றைய கால கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி 2026-ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசு. தற்போது அவர்கள் மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு எந்த அரசாங்கமும் சரியாக செயல்படவில்லை.  திராவிட மாடல் அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதை நிச்சயம் நாங்கள் மக்களிடம் வெளிப்படுத்துவோம், நாங்கள் இன்னொரு மொழியை திணிக்கவில்லை, இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறோம். அதனால் இவர்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழ் மொழிக்கு எதிரானவர்களைப் போல கொண்டு வருகிறார்கள். 

பாரத பிரதமர் முதற்கொண்டு தமிழ் மொழியை தான் நாங்கள் போற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். கட்சியில் இருந்து விலகுதல், சேருதல் எல்லாம் ஒரு கொள்கையின் அடிப்படையில், செயல்படுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தமட்டில், உறுதி தன்மையோடு இருக்கிறது. அதனால் பா.ஜ.க வில் இருந்து அவர் விலகுகிறார். இவர் விலகுகிறார் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க வின் உண்மையான கொள்கையில் இருந்து உண்மையான தொண்டர்கள் யாரும் விலக மாட்டார்கள். உண்மையை கூற வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். அதே போல குழந்தைகளை வைத்து நீங்கள் நாடகம் நடத்த வேண்டாம், அரசியல் செய்யாதீர்கள். நேரடியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மொழிக் கொள்கை என்று சொல்லாமல், விரிவு படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை கொடுங்கள். அதே போல ரயில் நிலையங்களில் சென்று இந்தியில் இருக்கும் பெயர் பலகைகளை அளிக்கிறீர்களே ?. வேறு மாநிலத்தவர் அந்த ரயில் நிலையத்திற்கு வந்தால் எப்படி பெயரை தெரிந்து கொள்வார்கள் ? குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறீர்கள். அதுவே உங்களுடைய பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் இந்தி எழுத்துக்களை அளிப்பீர்களா?. இதோடு உங்களுடைய இரட்டை வேடத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதே போல ஒரு செங்கலை கூட உருவ முடியாது என கூறிக் கொண்டு பயத்தோடு நடமாடுகிறார்கள். ஒரு செங்கலை மட்டும் இல்ல, செங்கோலையே நாங்கள் சட்டமன்றத்தில் நிறுவுவோம் எனக் கூறி இருக்கிறோம். அதனால் நாங்களா? அவர்களா? என்று பார்க்கலாம். பயப்படவில்லை என்று கூறிக்கொண்டு பயத்தோடு திரிகிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து. தெலுங்கானாவிலும் இதேபோன்று மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதலமைச்சரை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்திற்கு வேண்டும் தானே, முதலில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் இருந்து வரக் கூடிய நல்ல திட்டங்களை ஏற்க மறுக்கிறீர்கள்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.