டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் எலான் மஸ்கின் ஆதரவு. அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலையிடும்படியான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களில் எலான் மஸ்கின் ஆலோசனைகள் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதில் ஒன்று, நெரிசல் மிகுந்த பகுதியான மன்ஹாட்டனுக்குள் நுழையும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 9 டாலர் கட்டணம் முன்மொழியப்பட்டது. இந்த திட்டத்தை அதிபர் ட்ரம்ப் எலான் மஸ்கின் ஆலோசனையின் அடிப்படையில் ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ட்ரம்ப் தன்னுடைய truth வலைபக்கத்தில், ``வாகன நெரிசல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் முடிவுக்கு வந்தது. மன்ஹாட்டனும், நியூயார்க் முழுவதும் காப்பாற்றப்பட்டது. மன்னர் நீடூழி வாழ்க." எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (HUD) தலைமையகத்தில் இருக்கும் உணவக தொலைக்காட்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கின் கால்களில் முத்தமிடுவது போன்ற வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்த வீடியோவில், ``உண்மையான ராஜா வாழ்க" என்ற வாசகமும் இருந்தது.
இது சைபர் பாதுகாப்பு மீறலால் ஏற்பட்ட சிக்கலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த ஹேக்கிற்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய HUD செய்தித் தொடர்பாளர் கேசி லவெட், "இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK