தாய் மொழியில் யாரும் கை வைக்கக்கூடாது என நடிகர் வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார்.
வடசென்னையில் நடைபெற்ற முதல்வர் பிறந்த தின விழாவில் உரையாற்றிய நடிகர் வடிவேலு, மதுரையில் இருக்கும் திருவிழா போல இருக்கிறது. சித்திரைத் திருவிழா போல இருக்கிறது. செந்தமிழ் நாட்டினுடைய முதல்வர், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா, முதல்வர் ஸ்டாலினுக்கு 72 வது பிறந்த நாள். இது 72 வது பிறந்த நாள் மாதிரி தெரியவில்லை. போன வாரம் வந்த மாதிரி இருக்கிறது. அதை திருப்பி போட்டால் 27. அவர் உழைப்பு, மக்களுக்கு செய்த பணி வேகம் எல்லாம் அப்படியே இருக்கிறது. அவரைப் பார்க்கும்போதெல்லாம், நிறைய போராட்டங்களை சந்தித்தே வந்திருக்கிறார். போராடி போராடி இன்றைக்கு வரைக்கும் போராடி கொண்டு இருக்கிறார். அவரால் பலனடையாத குடும்பமே இல்லை. மக்களே இல்லை. விமர்சனம் என்ற பெயரில் எவ்வளவு எரிமலைகள் வருகிறது சிக்ஸர் அடிப்பது போல் தூக்கி அடிக்கிறார். முதலமைச்சர் அவர் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை.
தமிழ் தொன்மை வாய்ந்த மொழி. எவ்வளவு போராட்டங்கள், இவர் இல்லை என்றால் என்ன ஆகும். அருமையான, திறமையான முதலமைச்சர். ஆனால் ரொம்ப பொறுமையான முதலமைச்சர் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது.
அதைப் பார்த்து பொறுமையே கடுப்பாகி விட்டது. ஆனாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து கொண்டே இருக்கிறார். என்ன வேணும்னாலும் சொல்லு... என்று சிரித்துக் கொண்டே பேசியவர், அவர் வேலை செய்து கொண்டே இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியவர், மக்கள் பணி. மக்களுக்காக எந்த நேரமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த மனிதன் செய்யும் அக்கப்போரு பாருங்க என்று சேகர் பாபுவை கலாய்த்தும், பாராட்டியவர், எல்லா கோயிலையும் ஜெக ஜோதியாக வைத்திருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டத்தில் என் குலதெய்வ கோவிலில் 28 ஏக்கர் ஆட்டைய போட்டு போயிட்டாங்க. அதை அமைச்சர் சேகர் பாபுவிடம் சொன்னேன். பேப்பர் இருக்கா என்று கேட்டார், கொடுத்தேன். மறுநாள் காலையில் இடம் என்னிடம் வந்து விட்டது என்று கூறிய வடிவேலு, காட்டு பரமக்குடி ஊரில் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டி கொடுக்க சொன்னேன்.. யார் அங்கே என்று தனக்கான பாணியில் பேசியவர், உடனே செய்து கொடுத்து விட்டார்.
முதலமைச்சரும் அப்படித்தான் அவர் கேட்ட அமைச்சரும் இப்படித்தான். போர் படை தளபதி போல... இந்த இயக்கம் 75 ஆண்டாக இருக்கிறது. என் தகப்பனை போல வாழ்த்துகிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் நன்றாக இருப்பார். தமிழ் மொழிக்கு ஒரு சிறிய ஆபத்து. வழக்கம் போல் வந்து கொண்டுதான் இருக்கிறது. காக்கா காக்கா மாதிரி தான் கத்தும். அதுக்கு தாய் மொழி இல்லை. கிளி அது தாய் மொழியில் கத்துகிறது. நாய் அது தாய்மொழியில் குலைக்கிறது. அது போல நாயை மாடு போல கத்து என்றால் எப்படி கத்தும். யார் யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக் கொள்ளட்டும் ஆனால் கட்டாயப்படுத்தாதீர்கள். நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் மொழி இருக்கிறது அதுதான் அடையாளம். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் தாய், தமிழ் மொழி. என்ன நடந்தாலும் சரி இந்த மொழிக்காக என் உயிரை கொடுப்பேன் என்று முதலமைச்சர் சொன்னாரே அந்த ஒரு வார்த்தை தமிழ்நாட்டு மக்களின் மனதை நெகிழ வைத்திருக்கிறது. எல்லா மொழிகளுக்கும் கற்றுக் கொடுக்கும் மொழி தமிழ்.
நான் அரசியல் பேசவில்லை அரசியலுக்கு கிடையாது இது என்னுடைய மொழி. தமிழனுடைய மேடையில் நின்று பேசுகிறேன். இது தமிழ்நாட்டின் மேடை தமிழனுடைய மேடை. யாரையும் குறை சொல்லவில்லை. முதலமைச்சர் ஜெயித்துக் கொண்டே இருப்பார். தமிழ்த்தாய் பெற்றெடுத்த செல்ல பிள்ளை. அவர் இருக்கும் வரை தமிழ் தாய் மொழிக்கு எந்த கேடும் வராது.
அவர் எங்கள் வீட்டில் ஒரு அண்ணன். ஒவ்வொரு வீட்டு மக்களுக்கும் ஒரு மூத்த பிள்ளை, தகப்பன் மாதிரி. மேடு பள்ளம் வந்தாலும் அத்தனையும் தாண்டி அடித்து வென்று கொண்டே இருப்பார். 2026 லும் இதே தான். அவர் ஜெயிப்பார். 200 க்கும் மேல் வருவார். சொன்னதையும் செய்வார். சொல்லாததையும் செய்வார் என தனது பேச்சை நிறைவு செய்தார்.