ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனுக்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, அவர் இந்த வழக்கில் முதல் எதிரியாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாகேந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹமீது இஸ்மாயில், ‘‘நாகேந்திரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல்நிலை தற்போது மேலும் மோசமாகியுள்ளதால் அவருக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.
இந்தநிலையில் நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.