Vijay Ajith: சினிமாவில் இரண்டு நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது சினிமா துவங்கியது முதல் இருக்கிறது. பெரும்பாலும் இது எல்லா மொழிகளிலும் இருக்கும். குறிப்பாக இந்திய மொழிகளில் இது அதிகமாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி இடையே அந்த போட்டி இருந்தது.
எம்.ஜி.ஆர் ஆக்சன் படங்களில் நடித்தால் சிவாஜியோ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள செண்டிமெண்ட் கதைகளில் நடித்து ஸ்கோர் செய்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் அப்போதே தியேட்டர்களில் சண்டை போட்டு கொள்வார்கள். அவர்களுக்கு பின் ரஜினி - கமல் போட்டி துவங்கியது.
எம்.ஜி.ஆரின் ரூட்டில் போனார் ரஜினி. எனவே, அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவானர்கள். கமலோ நடிப்புக்கு தீனி போடும் புதுப்புது கதைகளை தேடிப்பிடித்து நடிக்க துவங்கினார். நடிப்பை விரும்புபவர்கள் கமலுக்கு ரசிகர்களாக மாறினார்கள். ரஜினி, கமல் படங்கள் ஒன்றாக தியேட்டர்களில் வெளியாகும்போது அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
இது தொடர்கதையாகவே இருந்தது. தங்களின் படங்கள் ஓட ரஜினிக்கும், கமலுக்குமே இது தேவைப்பட்டது. அவர்களுக்கு அடுத்து விஜய் - அஜித் இடையே இந்த போட்டி உருவானது. கடந்த 20 வருடங்களாகவே இந்த போட்டி நிலவி வருகிறது. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தியேட்டர்களில் சண்டை போட்டுக்கொண்டார்கள் என்றால் இவர்களின் ரசிகர்கள் டிவிட்டரில் சண்டை போட்டு கொண்டார்கள்.
அஜித் படம் வெளியாகும்போது விஜய் தனது படத்தை ரிலீஸ் செய்வார். விஜய் படம் வெளியாகும்போது அஜித் தனது படத்தை ரிலீஸ் செய்வார். யார் வெற்றி பெறுகிறார் பார்க்கலாம் என்கிற மனோபாவம் இருவரிடமும் இருக்கிறது. ஆனால், இப்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு போகிறார். சிம்பு - தனுஷ் போட்டி துவங்கினாலும் சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்காததால் அது நீர்த்துப்போனது.
இந்நிலையில், விஜயின் நண்பரும், நடிகருமான ஷாம் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித்.. இதுல விஜய் - அஜித்தோட முடிஞ்சது. இனி அப்படி ஒன்னு தமிழ் சினிமாவில் இருக்காது. ஏனா இப்போ நிறைய பேர் வந்துகிட்டே இருக்காங்க. அப்போலாம் ஹீரோதான் மாஸ். ஆனா இப்போ கண்டெண்ட்தான் மாஸ்’ என பேசியிருக்கிறார்.