சர்வதேச விமான நிலையங்களில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவிலான வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அப்படி இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த உம்மா ஹமீது நாச்சியார் என்ற பெண் பயணி தனது உடமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
உடனே அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.