தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் என்பது அடிக்கடி அரங்கேறுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை. மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது.அதன்படி கடலூரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்காக போலீசாரிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி நடிகர் விஜய் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக நேரடியாக போராட்ட களத்திற்குள் குதிக்கிறார். ஏற்கனவே பரந்தூர் சென்று அங்கு ஏர்போர்ட்டுக்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்து பேசிய விஜய் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து விஜய் வேங்கை வேல் செல்வதாக கூறப்பட்ட நிலையில் அந்த பயணம் ரத்தானது. தற்போது மீனவர்களுக்காக விஜய் களத்தில் குதிக்கிறார். இந்த போராட்டத்தில் விஜயுடன் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் விஜய் முதல் முறையாக போராட்ட களத்திற்குள் வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.