சாம்பியன்ஸ் ட்ராபி; கோப்பையை வென்ற இந்திய அணி!
Dhinasari Tamil March 10, 2025 07:48 AM

#featured_image %name%

சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா-நியூசிலாந்து  இறுதி ஆட்டம் – 09.03.2025

இந்திய அணி கோப்பையை வென்றது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணியை (50 ஓவர்களில் 251/7, டேரியல் மிட்சல் 63, ப்ரேஸ்வெல் 53, ரவின் ரச்சீந்திரா 37, கிளன் பிலிப்ஸ் 34, வருண் சக்ரவர்த்தி 2/45, குல்தீப் யாதவ் 2/40, ஷமி 1/74, ஜதேஜா 1/30) இந்திய அணி (49 ஓவர்களில் 254/6, ரோஹித் ஷர்மா 76, ஷ்ரேயாஸ் ஐயர் 48, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 34, ஷுப்மன் கில் 31, அக்சர் படேல் 29, ஹர்திக பாண்ட்யா 18, மிட்சல் சாண்ட்னர் 2/46, ப்ரேஸ்வெல் 2/28, ரவீந்திரா 1/47, ஜாமிசன் 1/24) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடின. முதலில் மட்டையாடிய நியூசிலாந்து அணிக்கு விளையாடிய அனைத்து மட்டையாளர்களும் சிறப்பாக ஆடினர். முதல் 10 ஓவர்களில் அந்த அணி 64 ரன் எடுத்தது. ஆனால் அதன் பின்னர் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சால் அதிரடியாக ஆடமுடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் தவித்தனர். வருண் சகரவர்த்தி (எகானமி ரன் ரேட் 4.5), குல்தீப் யாதவ் (4.0), அக்சர் படேல் (3.62), ரவீந்திர ஜதேஜா (3.0) என ரன் கொடுக்காமல் இந்த நால்வரும் வீசிய பந்துவீச்சால் நியுசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (76 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு துணை நின்று ஆடினார். ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பந்தை கிளன் பிலிப்ஸ் மிக மிக அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்சைப் பிடிக்க அவருக்கு ரெஸ்பான்ஸ் டைம் 0.7 விநாடிகள் மட்டுமே இருந்தது. இருப்பினும் உயரப் பறந்த பந்தை ஒருகையால் அவர் கேட்ச் பிடித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. கில் ஆட்டமிழந்த இரண்டாவது பந்தில் கோலி அவுட் ஆனார்.

பின்னர் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் (48 ரன்), அக்சர் படேல் (29 ரன்), கே.எல் ராகுல் (ஆட்டமிழக்காமல் 34 ரன்), ஹார்திக் பாண்ட்யா (18 ரன்), ரவீந்தர ஜதேஜா (9 ரன்) ஆகிய அனைவரும் சிறப்பாக ஆடினர்; ஆயினும் வெற்றிக்குத் தேவையான ரன்களை எட்டுமுன்னர் ஆட்டமிழந்தனர். இந்திய மட்டையாளர்கள் எட்டாம் இடத்தில் இறங்கும் ரவீந்த ஜதேஜா வரை உள்ளனர் என்பதால் ஒரு ஓவர் மீதியிருக்கும்போது 254 ரன்கள் அடித்து இந்திய அணி சாம்பியன் ட்ராபி கோப்பையைக் கைப்பற்றியது.

          இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த சாம்பியன்ஸ் ட்ராபியின் தொடர் நாயகனாக  ரச்சின் ரவீந்திரா அறிவிக்கப்பட்டார்.   

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.