Rohit Sharma: "ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேனா?" - வதந்திகள் குறித்து ரோஹித் சொல்வதென்ன?
Vikatan March 10, 2025 01:48 PM

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 2013 க்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை மீண்டும் இந்திய அணியிடமே வந்திருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைப் போல இந்தப் போட்டியோடு ஓடிஐயிலிருந்தும் ரோஹித் ஓய்வு பெறுவார் என்பது போலப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்தப் பேச்சுக்கெல்லாம் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Rohit Sharma

பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசியவை, "நான் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதன்படிதான் பேட்டிங் ஆடவும் செய்கிறேன். 2019 உலகக்கோப்பையில் நான் அதிகமாக ரன்கள் எடுத்தேன். ஆனால், அணி வெல்லவில்லை. அணி வெல்லும்போது நீங்கள் செய்யும் பங்களிப்புகள்தான் ஒருவித திருப்தியைக் கொடுக்கும். ஓடிஐ போட்டிகளிலிருந்து நான் ஓய்வுபெறப்போவதில்லை. வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

எதிர்கால திட்டமென்றும் என்னிடம் எதுவுமில்லை. அப்படியே தொடரப்போகிறேன். நடப்பது நடக்கட்டும். ஸ்ரேயாஷ் ஐயர் இந்த அணியின் சைலண்ட் ஹீரோ. மிடில் ஓவர்களில் அவர் ஒரு முக்கியமான வீரர். இந்தப் போட்டியில் நான் அவுட் ஆன போது கூட ஸ்ரேயாஷ் ஐயர் அக்சர் படேலுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. அதிகமான போட்டிகளில் ஆடிய அனுபவமிக்க வீரர்களிடம் கூட இன்னமும் வெற்றிக்கான பசி இருக்கிறது. அது இளம் வீரர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.

Champions Trophy

எங்கள் அணியில் 5-6 மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணியினுடைய வேலையை எளிமையாக்கி விடுகிறார்கள். இந்த மாதிரியான தொடரை வெல்ல அத்தனை வீரர்களின் பங்களிப்பும் தேவை. முதல் போட்டியிலிருந்தே எங்கள் அணியில் உள்ள அத்தனை வீரர்களும் வெற்றியில் பங்களிப்பு செய்தார்கள். அதனால்தான் எங்களால் சீராக ஆடி வெல்ல முடிந்தது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.