தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறார். அதாவது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் இலங்கை அரசை கண்டித்தும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் கடலூரில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் மீனவர்களுடன் சேர்ந்து விஜயும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் விஜய் மீனவர்களின் பிரச்சனையை கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றார். அதோடு மக்கள் பிரச்சனைக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். மேலும் முன்னதாக
சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாம் தேர்தல் அங்கீகாரத்தை எப்போதோ பெற்றிருக்க வேண்டிய நிலையில் கால் அங்கீகாரத்திற்கு பிறகு தான் நமக்கு இது கிடைத்துள்ளது. இதற்காக நாம் பட்ட கஷ்டம் நமக்கு தான் தெரியும். ஆனால் இப்போது கட்சி தொடங்கினால் யூகங்கள் கூட செய்தியாக மாறிவிடுகிறது. இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத நிலையில் தற்போதே 20 முதல் 24 சதவீத வாக்குகளை பெற்று விடலாம் என்கிறார்கள். அதோடு அடுத்த முதல்வர் நான்தான் என்றும் கூறுகிறார்கள். இன்னும் தேர்தலை சந்திக்காத நிலையில் எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்பதே தெரியாது.
அப்படி இருக்கும்போது நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லும் அளவிற்கு சமூகம் இருக்கிறது. இத்தகைய சமூகத்தில் போராடி தான் நாம் அங்கீகாரத்தை பெற்றுள்ளோம். நம்முடைய வாக்கு வங்கியை இன்னும் பலப்படுத்த வேண்டும். அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று தொடர்ந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் அதிகார பகிர்வை பெற முடியும் என்று கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிலையில் கண்டிப்பாக வெற்றி பெற்று முதல்வராவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதனை மறைமுகமாக விமர்சித்து தான் திருமாவளவன் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.