தெலங்கானா மாநிலத்தின் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ரெட்டி (44) குடும்பத்துடன் ஹைதராபாத் ஹப்சிகுடாவிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு குடிபெயர்ந்திருந்தார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். ஆனால், வேலை இழந்த பிறகு, கடந்த ஆறு மாதங்களாக தொழில் இல்லாமல் இருந்ததால், குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திர சேகர் ரெட்டி தன் மகன் விஸ்வன் ரெட்டிக்கு (10) விஷம் கொடுத்து, மகள் ஸ்ரீதா ரெட்டி (15), மனைவி கவிதாவுடன் (35) சேர்ந்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக உஸ்மானியா பல்கலைக்கழக போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் சந்திரசேகர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணமில்லை. வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்கொலைக் கடிதத்தில் சந்திரசேகர் ரெட்டி, நீரிழிவு, நரம்பு மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.