கார் கதவின் கண்ணாடி இடையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஷன் தாக்குர். இவர் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு பூஜை போடுவதற்காக தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, குடும்பத்தினர் அனைவரும் பூஜையில் பங்கேற்ற நேரத்தில் , ரோஷனின் ஒன்றரை வயது குழந்தை ரேயான்ஷ், காரின் உள்ளே அமர்ந்து கொண்டு, கார் கதவின் கண்ணாடி வழியாக தலையை வெளியே நீட்டி, அங்கு சுற்றித் திரிந்த குரங்குகளை வேடிக்கை பார்த்துள்ளான்.
அப்போது காருக்கு திரும்பிய குழந்தையின் தந்தை, இன்ஜினை இயக்கிய போது, திறந்திருந்த கார் கதவின் கண்ணாடி தானாக மேலே உயர்ந்துள்ளது . இதில் குழந்தை ரேயான்ஷின் கழுத்து சிக்கி உடனே மயக்க நிலைக்கு சென்றான். இதனால் பதறிய குறும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.