“ஒரு வாரத்தில் திருமணம்….” துடிதுடித்து உயிரை விட்ட புதுமாப்பிள்ளை…. கதறும் குடும்பத்தினர்….!!
SeithiSolai Tamil March 12, 2025 07:48 PM

விழுப்புரம் மாவட்டம் மழவராயனூர் சேர்ந்தவர் தவமணி. இவர் திமுக மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவரது மகன் கலாநிதி சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வருகிற 16-ஆம் தேதி கலாநிதிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் சென்னையில் இருக்கும் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்கு பேருந்தில் வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினரான குணசேகரன் என்பவருடன் கலாநிதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் கோலியனூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயிலுக்காக ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதே நேரம் பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கேட் மூடுவதற்குள் அதனை கடந்து சென்றுவிடலாம் என லாரி ஓட்டுநர் வேகமாக வாகனத்தை இயக்கிய போது, குணசேகரனும் கலாநிதியும் நாமும் கேட்டை கடந்து சென்றுவிடலாம் என எண்ணியுள்ளனர். இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மோதியதால் ரயில்வே கேட் இரண்டாக ஒடிந்து அதன் ஒரு பகுதி லாரியின் பக்கவாட்டில் வந்த கலாநிதியின் தலையில் பயங்கரமாக தாக்கியது. இதனை பார்த்ததும் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் குணசேகரன் கலாநிதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி கலாநிதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.