தமிழகத்தின் கல்வித் துறையை சரிவர நிர்வகிக்கத் தவறிய திராவிட மாடல் அரசின் குளறுபடிகளால், பல பெற்றோர்கள் தமிழ் வழி பள்ளிகளை ஒதுக்கிவிட்டு தனியார் பள்ளிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னிகரில்லா நமது தமிழகத்தின் கல்வி முறையானது வீழ்ச்சியடைந்து வருவதற்கு திமுகவின் பேரழிவு தரும் சில கொள்கைகளே முதற் காரணமாகும். தமிழகப் பள்ளிகளை சீர்படுத்துவதை விட்டுவிட்டு, தங்கள் தோல்விகளை மறைக்க மொழி அரசியலைக் கையிலெடுத்து விளையாடும் திராவிட மாடல் அரசின் அழிவு தரும் கொள்கைகளின் அவலத்தை வெளிக்கொணருவோம். ஆண்டு கல்வி நிலை அறிக்கை 2024 (ASER) -இன்படி, 2018-2022 ஆண்டுகளுக்கு இடையே, தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கக்கூடிய எட்டாம் வகுப்பு மாணவர்களின் விகிதாச்சாரம் 12% ஆக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம், குஜராத் & ஹரியானா போன்ற மாநிலங்கள் கல்வித்தரத்தில் மேம்பட்டுள்ளது. ஆக, திமுக ஒரு தலைமுறையையே தோல்வியடையச் செய்துள்ளது என்ற உண்மை இதன்மூலம் புலப்படுகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நன்கு படித்த, தன்னம்பிக்கைமிக்க எதிர்கால தலைமுறையினரால் நமது வாரிசு அரசியல் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வியை ஆதரிக்கும் மத்திய அரசின் ₹10,000 கோடி கல்வி நிதியை தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நிராகரித்தார்.
2017 ஆம் ஆண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவையும் மீறி, நமது மத்திய அரசின் நவோதயா வித்யாலயா (JNVs) பள்ளிகளை ஏற்றுக்கொள்ளாமல் அவற்றைத் தடை செய்த ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. ஆகையால் தான் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 48,000+ மாணவர்களுடன் 96 JNVs, கர்நாடகாவில் 15,500+ மாணவர்களுடன் 31 JNVs, குஜராத்தில் 17,000+ மாணவர்களுடன் 34 JNVs இருக்கையில், தமிழகத்தில் மட்டும் ஒரு நவோதயா பள்ளி கூட இன்னும் அமையவில்லை. திமுக-வின் தொடர் புறக்கணிப்புகளால் தமிழகத்தின் கல்வித்தரம் முடங்கியுள்ள நேரத்தில் உ.பி., ஹரியானா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் கல்வியில் முன்னேறி வருகின்றன.
2018 முதல், தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத் திறன் 75%-லிருந்து 62.2% ஆகவும் அடிப்படை வகுத்தல் உள்ளிட்ட கணக்கு திறன் 49.6%-லிருந்து 37.8% ஆகவும் குறைந்துள்ளது. தமிழக கல்வித் தரத்தின் இந்த பெரும் சரிவானது திமுக-வின் நிர்வாகத் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு, முன்னேற்றத்தை விட அரசியல் காழ்ப்புணர்ச்சியை முன்னிறுத்தும் திமுக-வின் சுயநலத்திற்கு தமிழக குழந்தைகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? PM-SHRI பள்ளிகளைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் பெருமையாகப் பேசுகிறார். ஆனால் PM SHRI பள்ளிகள் குறித்த ஒப்புதல் கடிதத்தில் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டார் என்ற உண்மையை நமது மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளார். ஆக, தங்களின் அற்ப அரசியலுக்காக தமிழக மாணவர்களின் தரமான கல்வியைக் கொள்ளையடிக்கும் இந்த திராவிட மாடல் அரசு, எப்படி வேண்டுமானாலும் பொய் கூறி மக்களைக் குழப்பி ஏமாற்றும் என்பதையே திமுக-வின் இந்த திடீர் U-turn நிரூபிக்கிறது.
தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை, 2018-19 இல் 65.87 லட்சத்தில் இருந்து 2023-24 இல் 46.83 லட்சமாக குறைந்ததற்கு முழுக் காரணமும், திமுக-வின் தோல்வியடைந்த கல்விக் கொள்கைகள் தான். மேலும், தமிழகத்தின் கல்வித் துறையை சரிவர நிர்வகிக்கத் தவறிய திராவிட மாடல் அரசின் குளறுபடிகளால், பல பெற்றோர்கள் தமிழ் வழி பள்ளிகளை ஒதுக்கிவிட்டு தனியார் பள்ளிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக, நடைமுறையில் திமுக தமிழைப் பாதுகாக்கவில்லை, மாறாக நமது தாய்மொழித் தமிழை அழித்து வருகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
அனைவருக்கும் தரமான சிறந்த கல்வியை அளிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்தாமல், தனது தேர்தல் ஆதாயங்களுக்காக அதைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறது இந்த திராவிட மாடல் அரசு. இதுபோன்ற திமுக-வின் பிற்போக்குத்தனமான அரசியலுக்கு தமிழக மாணவர்களின் எதிர்காலம் பணயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. மேலும், தங்கள் குழந்தைகளை பன்மொழிக் கற்பிக்கும் உலகின் சிறந்த சர்வதேச பள்ளிகளில் படிக்க வைக்கும் திமுக-வினர், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் தரமான கல்வியைத் தட்டிப் பறிக்க நினைப்பது சகித்துக் கொள்ள முடியாதது. ஆக, திமுக-வின் இரட்டைவேட வெறுப்பரசியலுக்கு எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பலியாவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.