திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரே அரசு விழி இழந்தோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பார்வை குறைபாடுடைய மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 11 பேர் உட்பட 90 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி(18) என்ற மாணவி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் ராஜேஸ்வரி பள்ளி வகுப்பறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதற்கு பள்ளி தரப்பிலும் மாணவியின் பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனை முன்பு பார்வையற்றோர் சங்கத்தினர் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்கள் மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.